வெள்ளி, 11 ஜூன், 2010

நடராசர்


இந்துக்களின் கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவர்களின் முதன்மைக் கடவுளும் ஆகிய சிவனின் இன்னொரு தோற்றமே நடராசர் திருக்கோலம் ஆகும். நடராசர் என்ற சொல் நடனத்துக்கு அரசன் என்ற பொருள் தருகின்றது. நடராசர், நடராஜா, நடேசன், நடராசப் பெருமான் எனப் பலவாறாகக் குறிப்பிடப்படும் சிவன் நடனத்தில் வல்லவனாக உருவகிக்கப்படுகிறான். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்

தோற்றம்

சைவ ஆகமங்களிலும், சிற்பநூல்களிலும், பல்வேறு சைவ நூல்களிலும் நடராசர் தோற்றத்தின் விபரங்கள் தரப்பட்டுள்ளன. கோயில் கட்டிடச் சிற்பங்களிலும், வணக்கத்துக்குரிய சிலைகளாகவும் காணப்படும் உருவங்களும் நடராசர் தோற்றத்தை விளக்குகின்றன. ஊன்றியிருக்கும் கால், குப்புற விழுந்து கிடக்கும் முயலகன் என்ற அசுரனின் முதுகின்மீது ஊன்றப்பட்டுள்ளது. இடது கால் உடம்புக்குக் குறுக்காகத் தூக்கப் பட்ட நிலையில் உள்ளது. நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க் கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க் கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில், விரல்கள், தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது.
மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி ஒன்றும், பாம்பும் இத் தோற்றத்தின் தலையில் சூடப்பட்டுள்ளது. இவற்றுடன், கங்கையும், பிறையும் சடையில் காணப்படுகின்றன. முடிக்கப்படாத சடையின் பகுதிகள் தலைக்கு இருபுறமும், கிடைநிலையில் பறந்தபடி உள்ளன. இடையில் அணிந்துள்ள ஆடையின் பகுதிகளும் காற்றில் பறக்கும் நிலையில் காணப்படுகின்றன

தோற்ற விளக்கம்

நடராசர் தோற்றத்தின் பல்வேறு அம்சங்களுக்கான விளக்கங்களும், காரணங்களும் பழங்கதைகள் ஊடாகவும், தத்துவங்களாகவும் சைவ நூல்களிலே காணக்கிடைக்கின்றன. சிவனின் நடனத்தோற்றம் இறைவனின் ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைக் குறித்து நிற்பதாகச் சைவ நூல்கள் கூறுகின்றன. உடுக்கை, படைத்தலையும், அடைக்கலம் தரும் கை, காத்தலையும், தீச்சுவாலை, அழித்தலையும், தூக்கிய கால்கள் அருளல் ஆகிய முத்தி நிலையைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.
ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது. ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம். இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்பதை இது உணர்த்துகிறது. முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.
பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில்் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!
அவற்றில், சேஷநாகம் - கால சுயற்சியையும், கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும், கங்கை - அவன் வற்றா அருளையும், ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும் குறிக்கின்றன.
பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.
ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.
வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.
தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.
முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது. இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.
பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.
அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது.
நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம். இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!
பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக