குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற கிராமத்துடன் தொடர்புடையது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று இந்தியாவின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.
வரலாறு
நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.
தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம்.
நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கு ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயல்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.
இசைக்கருவிகள்
இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.
நடனமுறை
குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக