வெள்ளி, 11 ஜூன், 2010

நடன வகைகள்

ஒடிசி (நடனம்)

ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப் படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.
வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்.

நடன முறை

ஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்ஷம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.
ஒடிசி நடனத்தின் இன்றைய வளர்சிக்குக் காரணமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பணிகிரஹியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ராவுட், குரு தேவ்பிரசாத் தாஸ் ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்

சாம்ப்ரா

சாம்ப்ரா/சாம்ப்ரா மோரா என்பது, கிரனாதாவிலுள்ள உரோமா மக்களால் ஆடப்படும் ஒரு நடனம். இது, மூரிய நடனங்களிலிருந்து பிறந்தது என நம்பப்படுகிறது. இது கித்தானோ திருமணங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக சாக்ரோமோன்தே குகைகளிலும் குன்றுகளிலும் முக்கியமாக ஆடப்படுகிறது

மோகினி ஆட்டம்

மோகினி ஆட்டம் குச்சிப்புடி போல் சென்ற நூற்றாண்டில் ஒரு சாஸ்திரிய நடனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மோகினி என்ற சொல் ஒரு அழகான பெண்ணென்றும், ஆட்டம் நடனம் என்றும் பொருள் படும். பாற்கடலிலிருந்து தோன்றிய அமிர்தத்தை விநியோகிக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய மோகினியே இந்த நடனக் கலையின் பெயருக்கு மூல காரணம் ஆகும். மோகினி ஆட்டத்தில் பரதநாட்டியத்தின் சில சாயல்களையும் காணலாம்

குச்சிப்புடி

குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற கிராமத்துடன் தொடர்புடையது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று இந்தியாவின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.

வரலாறு

நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.

தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம்.

நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கு ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயல்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்

இசைக்கருவிகள்

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.

நடனமுறை

குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு

2 கருத்துகள்:

  1. இதன் உடை அமைப்பு எவ்வாறு உள்ளது. அதில் உள்ள மாற்றம் என்ன?

    பதிலளிநீக்கு
  2. ராணி கும்பா குடையின் படத்தை உள்ளீடு செய்ய முடியுமா

    பதிலளிநீக்கு